மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 4 September 2026

கடவுளானாலும் கஷ்டப்பட்டவர் கிருஷ்ணர்... ஏன்?



இன்று கிருஷ்ண ஜெயந்தி. கண்ணனின் பிறந்தநாள். கோயில்களில் உற்சவம், வீடுகளில் உறியடி, கோலங்கள், பாட்டு, பஜனை, ஊர் முழுக்க எங்கும் ஆனந்தம். ஆனால் ஒரு நிமிடம் நிதானமாக யோசித்தால், இந்த ஆனந்தத்திற்குப் பின்னால் ஒரு பெரும் வாழ்க்கை இருக்கிறது.


அந்த வாழ்க்கை மனிதராக அவதரித்த கடவுளின் வாழ்க்கை.

துன்பங்களால் நிறைந்த, இழப்புகளால் ஆன, தனிமையால் முடிந்த ஒரு வாழ்க்கை.

      துன்பங்கள் மட்டுமே அனுபவித்தாலும் அதை சற்றும் பெரிதுபடுத்தி கொள்ளாமல் சதா சர்வ காலமும் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒரு அவதார புருஷனின் வாழ்க்கை.


      பரிபூரணமான கடவுள், சாட்சாத் நாராயணனின் அவதாரம் என்று நாம் போற்றும் கிருஷ்ணர், தன் வாழ்நாள் முழுவதும் என்ன அனுபவித்தார் என்று பார்த்தால், அதில் வஞ்சகங்களும், வன்முறையும், தனிமையும், பிரிவும் மட்டுமே அதிகம் இருக்கும்.


     இதை அவரது நிலையில் இருந்து யோசித்து பார்த்தால் நாம் படும் கஷ்டங்கள் அனைத்துமே ஒன்றுமே இல்லை என்பது போல தோன்றும்.


வாசுதேவ கிருஷ்ணரின் பிறப்பே ஒரு சிறைச்சாலையில் தான் நிகழ்ந்தது.

     மதுராவின் இருண்ட சிறைச்சாலையில். தாய் தேவகி, தந்தை வசுதேவர் இருவரும் தங்கள் சொந்த சகோதரன் / மைத்துனன் கம்சனால் விலங்கிடப்பட்டு அடைக்கப்பட்டவர்கள்.

     கிருஷ்ணர் கண் திறந்த முதல் தருணமே, தன் தாயின் கண்ணீரையும், சங்கிலிச் சத்தத்தையும் கேட்டுக்கொண்டே பிறந்தான். பிறந்த அன்றிரவே, தன் தாய் தந்தையரைப் பிரிந்து, யமுனை நதியைக் கடந்து, அந்நியர் வீட்டில் அடைக்கலம் பெற்று வளர்க்கப்பட்டார்.


     பிறந்த குழந்தை தன் தாயின் மார்பில் பாலருந்தும் உரிமை கூட மறுக்கப்பட்டவர் கிருஷ்ணர்.

      குழந்தைப் பருவம் முதலே கொலை முயற்சிகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது.

   பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் சூறாவளி, கேசி, அரிஷ்டாசுரன், வியோமாசுரன் இவை எல்லாம் "லீலைகள்" என்று நாம் பாடுகிறோம்.

     ஆனால் ஒரு குழந்தையின் பார்வையில் பார்த்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கொலை முயற்சி. விளையாட வேண்டிய வயதில், உயிருக்குப் போராட வேண்டியிருந்தது.

     தன் சொந்த தாய்மாமன் கம்சன் தன்னைக் கொல்ல நினைப்பதை அறிந்தே வளர்ந்தார் கிருஷ்ணர்.

    கண்ணனுக்கு கிடைத்த முதல் முழுமையான அன்பு என்பதே தன்னை கோகுலத்தில் வளர்த்த யசோதையின் அன்பு தான்.

ஆனால் அதுவும் நிரந்தரமானதாக இருக்கவில்லை.

     கம்சனை வதம் செய்யும் பொருட்டு மதுரா சென்ற கிருஷ்ணர், அதன் பின் மீண்டும் ஒருபோதும் கோகுலம் திரும்பவில்லை.


      யசோதையையோ, தன்னுடன் விளையாடிய கோபியரையோ, தன்னுடைய மனம் கவர்ந்த ராதையையோ மீண்டும் காணவில்லை என்பது புராணங்களில் பரவலாகச் சொல்லப்படும் ஒரு வலி நிறைந்த உண்மை.

      ஆம் கடவுளாக இருந்தாலும் அவர் இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தான் வாழ்ந்தார்.

      தான் வளர்ந்த மண்ணை, தன்னை அரவணைத்த கரங்களை, ஒரு நாள் திடீரென விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஒருவருக்கு ஏற்படுமாயின் இதைவிட பெரிய பிரிவுத் துயரம் என்ன இருக்க முடியும்?

     இன்று நாம் கட்டி வைத்திருக்கும் வீடு வாசல் மனைவி மக்கள் என அனைவரையும் பிரிந்து சென்று தனியே ஒரு வாழ்க்கை வாழ சொன்னால் நம்மில் எத்தனைபேர் தயாராக இருப்போம்?

     கம்சனை வதம் செய்தபின், கம்சனின் மாமனார் ஜராசந்தன் மதுரா மீது பதினேழு முறை படையெடுத்தான் என்று புராணம் கூறுகிறது.


     போர், அழிவு, தன் மக்களின் பாதுகாப்பிற்காக இடையறாத போராட்டம். இறுதியில், தன் குடிமக்களைக் காப்பாற்ற, தலைநகரையே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தன் தலைநகரையே விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுராவை விட்டு, யாதவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, மேற்குக் கடற்கரையில் துவாரகை என்ற புதிய நகரம் அமைத்தார் கிருஷ்ணர்.

"போரிலிருந்து ஓடியவர்" என்று பொருள்படும் "ரணசோடு" என்ற பட்டப்பெயரைச் சூட்டிக் கொண்டாலும், அது கோழைத்தனத்தால் அல்ல தன் மக்களைக் காப்பாற்றத்தான். இதுவே ஒரு அரசனின் தர்மம். ஆனாலும், உலகம் அவரை அப்படி அழைத்தது.

கடவுளாக இருந்தும், பிறந்தது முதலே அவதூறையும், பழிச்சொல்லையும் சுமக்க வேண்டியிருந்தது.

ஸ்யமந்தக மணி திருடப்பட்டதற்கும், கிருஷ்ணர் மீதே பழி சுமத்தப்பட்டது. தான் செய்யாத குற்றத்திற்காக, தன் நற்பெயரைக் காப்பாற்ற, சத்யத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நேர்மையாக வாழ்ந்தும், அவதூறுகளிலிருந்து விடுபடவில்லை என்பதும் ஒரு பேருண்மை.

தன் மகன் பிரத்யும்னன் இழப்பு உள்பட

     யாதவ குலத்தினரிடையே நடந்த உள்நாட்டுச் சண்டைகள், தன் நெருங்கிய உறவினர்களின் மரணங்கள் இவை எல்லாம் கிருஷ்ணரின் இதயத்தில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தின.

குடும்பத்தை ஒன்றிணைக்க எவ்வளவோ முயன்றும், விதியின் ஓட்டத்தை மாற்ற முடியவில்லை.

       பாண்டவர்களுக்காக தூது சென்று, சமாதானத்திற்காக இறுதி வரை முயன்றும், போர் தவிர்க்க முடியாததாகவே ஆனது. போர் நிச்சயம் என்று அந்த பேரறிவுக்கே தெரிந்தே இவை அனைத்தையும் செய்தார் என்பது வேறு விஷயம்.

    தேரோட்டியாக நின்று, தன் சொந்த உறவினர்கள், குருபெரியோர்கள், நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதைக் கண்முன் காண வேண்டிய கொடுமை.

     அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்து தர்மத்தின் பாதையைக் காட்டியவரே, அந்தப் போரின் ஒவ்வொரு மரணத்தையும் தன் இதயத்தால் சுமந்தார்.

"இங்கு கொல்வதும் நானே கொல்லப்படுவதும் நானே" என்பதை நினைத்து பாருங்கள்.

         தன் நூறு மக்களையும் இழந்த காந்தாரி, தன் துயரத்தின் உச்சத்தில், "நீ இந்தப் போரைத் தடுக்கலாம், ஆனால் தடுக்கவில்லை" என்று கிருஷ்ணரையே பழி வாங்கினார். சாபம் அளித்தார்.

"உன் யாதவ குலமும் இப்படியே தமக்குள் சண்டையிட்டு அழியும். உன் நகரம் ஆழி பேரலையால் கடலுக்குள் மூழ்கும்" என்று சபித்தார்.

ஒரு சாதாரண மனிதப் பெண் கடவுளையே சபித்தார். கிருஷ்ணரோ, அதை மறுக்கவோ, தன் சக்தியால் தடுக்கவோ முயலவில்லை.

"ஆம், இது நடக்கும்" என்று மௌனமாக ஏற்றுக் கொண்டார்.

தர்மம் தன் போக்கில் நடக்க வேண்டும் என்பதற்காக, தன் மீதான சாபத்தையும் மனமுவந்து சுமந்தார்.

காந்தாரியின் சாபம் பலித்தது. பிரபாச தீர்த்தத்தில் நடந்த விருந்தில், மது போதையில் யாதவர்கள் தமக்குள் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் கொன்று, முழு குலமும் அழிந்தது.

கிருஷ்ணரின் கண் முன்னாலேயே, தன் சொந்த மகன்கள், பேரன்கள், உறவினர்கள் அனைவரும் மடிந்தனர்.


தன் கண்முன் தன் முழு உலகமும் சிதைவதைக் கண்ட அந்த தருணத்தை விட கொடிய துயரம் என்ன இருக்க முடியும்?

இறுதியில் முற்றிலும் தனிமை தான் எஞ்சியது.

தன் தந்தை வசுதேவரையும் இழந்து, தன் குலம் முழுவதும் அழிந்து, துவாரகை நகரமே கடலில் மூழ்கப் போகும் நிலையில், கிருஷ்ணர் முற்றிலும் தனியாக ஆனார்.

ஒரு காலத்தில் லட்சக்கணக்கானோரால் சூழப்பட்டிருந்தவர், இறுதியில் ஒரு காட்டில் தனியொருவராக அமர்ந்திருந்தார்.

        பிண்டாரக வனத்தில், ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணரின் பாதத்தை, மான் என்று தவறாக நினைத்து, ஜரா என்ற வேடன் அம்பு எய்தான். அந்த அம்பு பட்ட காயமே அவரது அவதார நிறைவிற்குக் காரணமாயிற்று.


      அந்த வேடனின் அம்பு, உண்மையில் முற்பிறவியில் வாலியாக இருந்தவனுடையது என்றும், "இராமாவதாரத்தில் மறைந்திருந்து நீ என்னைக் கொன்றாய், இப்போது நான் உன்னைக் கொல்கிறேன்" என்ற கர்ம பலனின் நிறைவு என்றும் புராணம் கூறுகிறது.

       காந்தாரியின் இந்த சாபத்தையும் மறுக்காமல், சாதாரண மனிதனைப் போலவே, மனதார ஏற்றுக் கொண்டு, அந்தச் சாபத்தின் நிறைவேற்றத்திற்காகவே காட்டில் தன்னந்தனியாக அமர்ந்து, தன் அவதாரத்தை நிறைவு செய்தார்.

ஒரே ஒரு கேள்வி! கடவுளாக இருந்தும் ஏன் இத்தனை துன்பங்கள்?

இதுவே கிருஷ்ணாவதாரத்தின் மகோன்னதம். இராமாதவதாரத்தைவிட கிருஷ்ணாவதாரம் இந்த யுகத்திற்கு உரித்தான ஒன்று.

       எல்லாம் வல்ல பரம்பொருள், தான் நினைத்தால் இந்த எந்த ஒரு துன்பத்தையும் ஒரு நொடியில் அழிக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவதாரத்தின் நோக்கமே தர்மத்தை நிலைநாட்டுவது, மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தானே அனுபவித்து, அதன் வழியே உலகிற்கு வழிகாட்டுவது.

     பிறப்பில் சிறை, குழந்தைப் பருவத்தில் கொலை பயம், இளமையில் பிரிவு, இளைஞப் பருவத்தில் போர்கள், மத்திம வயதில் அவதூறு, முதுமையில் குடும்ப அழிவு, முடிவில் தனிமையும் மரணமும்.


    இவை அனைத்தையும் கிருஷ்ண பரமாத்மா, ஒருபோதும் தர்மத்தைக் கைவிடவில்லை.

      பழி தீர்க்க முயலவில்லை, விதியை எதிர்க்கவில்லை. காந்தாரியின் சாபத்தை மௌனமாக ஏற்றது போலவே, ஒவ்வொரு துன்பத்தையும் சமநிலையுடன் ஏற்றுக் கொண்டார்.

        கிருஷ்ணர் அவதார நாளான இன்று அவரது ஜனன நாளில் அவரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இதுவே!

       வாழ்க்கை துன்பங்களால் நிறைந்தது என்பது கடவுளுக்குக் கூடத் தப்பவில்லை. ஆனால் அந்தத் துன்பங்களின் நடுவே, தர்மத்தையும் சமநிலையையும் விடாமல் பற்றிக் கொள்வதே உண்மையான வாழ்க்கை.

       இழப்புகள் வரும், பிரிவுகள் வரும், அவதூறுகள் வரும், தனிமை வரும். நாம் அன்பாக ஆதரித்தவர்களே நமக்கு எதிராக அஸ்திரம் ஏந்தி நிற்பார்கள்.

ஆனாலும் நாம் தர்மத்தின் பக்கமே நிற்க வேண்டும்.

"கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்" என்று நாம் அவரை போற்றுவது, அவர் இவற்றையெல்லாம் கடந்தும் தர்மத்தின் பக்கமே நின்றார் என்பதற்காகத்தான்.

இன்று, கிருஷ்ண ஜெயந்தி நாளில், அந்த பரமாத்மாவை நினைவு கூர்வோம்.

கடவுளாக இருந்தும் மனிதனாக வாழ்ந்து, மனிதனுக்கு வழிகாட்டிய அந்தப் பரம்பொருளை போற்றுவோம்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய.

- தயாநிதி வீரராகவன்
(முகநூலில் இருந்து)

Pages